Sunday, November 8, 2009

அவனின்றி ( பிராணன்) அவனில் அசைவு இல்லை.


                       


                                                       பிராணாயாமம்


பிராணாயாமம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைகள் நிறைய இருப்பினும்  அவை அனைத்தையும் கற்றுக்கொண்டபின் அல்லது புரிந்து கொண்டபின்தான் பிராணாயாமப் பயிற்சி செய்ய வேண்டும் என்ற விதியினை எவரும் சொல்லவில்லை என்றே தோன்றுகிறது.

ஏனென்றால் எண்ணிலடங்காப் பிராணாயாம முறைகள் மற்றும் அதன் சாரம் பிற உத்திகளோடு ஒன்றுபடுத்தியோ அல்லது வேறுபடுத்தியோ பார்ப்பதற்கு
 -கூட ஏதாகிலும் ஒன்றையாவது பின்பற்றி கற்றப்பின்பே மற்றவைகளைப் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும்.

எந்தப் பிராணாயாமம் எந்த அடிப்படைக்குள் வருகிறது. எந்த முறை சாதகர்களுக்குச் சிறந்தது என்பதை விட எது ஏற்றது எனவும் அவரவர்கள் நிலைக்கு ஏற்ப குருவின் தீர்மானமே சிறந்ததாகும் என பல சித்த புருஷர்கள் ஒன்று போலக் கூறுவதை அறியலாம்.

ஜாதகத்தில் கோள் நிலைகள் சாதகனின் பிறப்புக் காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் இருப்பது போலவும் கர்ப்பக்காலம் நீக்கி வரும் திசைகளில் காலக் கணக்கு போலவும் ஒவ்வொரு சாதகனுடைய பல்வேறு பிறவிகளில் கற்றது போக மற்றதைத் தொடர்வது அல்லது எதை எதிலிருந்து தொடர்வது என்பதையும் குருவால் தீர்மானிக்கப்படுவதாகும்.

 திறமையான சாதகர்கள் கற்றுக்கொள்ளும் போதே தனக்குரிய வழிமுறைகளை காலப்போக்கில் உணர்ந்து கொள்வான். அவ்வமயம் அவனுக்குப் பலப்பல உண்மைகள் புரியத்துவங்கும்.

பிராணாயாமம் என்பது ஒரு வெறும் மூச்சுப்பயிற்சி மட்டுமே   என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பது தவறாகும். இயல்பான சுவாசத்திலிருந்து அது வேறுபடுகிறது என்பதோடு வேறுபடுத்தப்படுகிறது      ஒழுங்குபடுத்தப்படுகிறது.
மேம்படுத்தப்படுகிறது. சக்தியூட்டப்படுகிறது  .மேலும் கால நிர்ணயம் மற்றும் ஒரு கணிதத்திற்கு உட்படுகிறது என்றெல்லாம் கூறலாம்.


ஓடுதல்,குதித்தல், தாண்டுதல், நீந்துதல், பளு தூக்குதல், அதிக நிறை உள்ளவற்றை நகர்த்துதல் நீண்ட நேரம் களைப்படையாமல் பணிபுரிதல் போன்றவற்றை எந்தவிதப் பயிற்சியும் இல்லாத சாதாரண ஒரு மனிதனை விட யோகப்பயிற்சி பெற்ற ஒருவரின் மேற்கண்டசெயல்பாடுகளை மிகச்சுலபமாகவும் விரைவாகவும் அதிசயத்தக்க வகையில்  செய்யக்கூடியதாகவும் இருக்கும்.

உதாரணமாக
பயிற்சி பெற்ற ஒரு சர்க்கஸ்காரன் (வித்தைக்காரன்) செய்யும் சாகசங்களைப் பயிற்சியற்ற மற்ற ஒருவர் செய்ய இயலாது.

இயல்பான மூச்சை பிராணாயாமத்தின் மூலம் வகைப்படுத்தப்படும்போது மனிதனின் உடல் ஆற்றல்  மற்றும் உள்ள ஆற்றல் பல மடங்கு பெருகுகிறது. எனவே பிராணாயாமம் என்பது ஆற்றல்களைப் பெருக்கும் ஒரு வித்தையும் ஆகும்.

இந்த வித்தையினை மூச்சுக்கலை , சரகலை, வாசிக்கலை , என பல பெயர்களை கொண்டதாகும். பிராணாயாமம் என்பதற்கு அடக்குதல் என்பது ஒரு பொதுப்பெயர் , பொதுச்சொல்  ஆகும்.

இயல்பான மூச்சினை பிராகிருத  வழியெனவும் முறையான மூச்சுவிடுவதை வைகருதம் எனவும் கூறுவர். மூச்சினால் பிராணன் இயக்கப்படுகிறது. தூலமான மனம் உடல் ஆகிறது. நுட்பமான உடல் மனம் என்றாகிறது. மனம் அடங்காத போது உடல்துன்பம் மொத்த வாழ்க்கையே
துன்பமயமாகும் நிலைக்கு ஆளாகுகிறது.
                               
பிராணனை அடக்கும்போது மனம் அடங்குகிறது. அதனால் வாழ்வு சிறக்கிறது. மனதை , புலன்களைக் கட்டுப்படுத்த பிராணாயாமம் முக்கியமாகிறது.
பசி, தாகம், மூச்சு, உடல் இயக்கம் இந்த நான்கும் பிராணனால் நடத்தபடுபவையே .

பிராணன் குறையும் போது இந்த நான்கு செயல்களாலும்
உடல் துன்பம் , உள்ளத்துன்பம் , ஏற்படுகிறது.

உணவில் , நீரில், காற்றில் , பிராணன் உலவுகிறது.

 தாவரம் , விலங்குகள், நீர்வாழ்வன , பறப்பன போன்றவைகள் நமக்கு பிராணனைத் தரும் உணவாகின்றன.

அவ்விதமே தாவரம், விலங்குகள் ,நீர்வாழ்வன , பறப்பன ஆகியவைகளுக்கும் பிராணனைத் தரும் உணவு தேவையாகிறது.

இதையே பரஸ்பரம்  ஒன்றிற்கு ஒன்றின் பிராண வேள்வியில் ஆஹுதிகள் ஆகின்றன. (அளிக்கப்படும் உணவுகள்)
எனவே இந்த பிராண வேள்விக்கு மூச்சு ஒரு அடிப்படை ஆகிறது.

மனிதன் மற்றும் ஏனைய அனைத்து உயிரிகளும் ஒவ்வொரு வகையில் சுவாசிக்கின்றன. எனினும் மனிதர்களால் மட்டுமே மூச்சினை ஒழுங்குப்படுத்தவும் , கட்டுபடுத்திக்கொள்ளவும் இயலுவதாக இருக்கிறது.

      மூச்சு உள் இழுத்தல், உள்நிறுத்துதல் , வெளி விடுதல், இந்த மூன்று வகையிலும் உள் நிறுத்துதல் என்பது  பிராணாயாம நெறிகளில் தலைமைச் செயல் என கருதப்படுகிறது.

 வெளிப்பிராண வாயுவை  பிராணனுக்கு உணவளிக்கும் வகையில் பயன்படுத்துவதற்கு உள் இழுத்தல் பூரகம், உள் வந்தடைந்த  பிராண வாயு என்ற உணவைப் பரிமாறும் வகையில் கும்பகம் பயனாகிறது. பயன்படுத்திய உணவில் பிராணன் ஏற்றுக் கொண்டது போக மீதம் உள்ள (உணவை) பிராண வாயு கழிவுகளை வெளியேற்றுதல் ரேசகமாகும் .

பிராணனுக்கு அதிகப் பலன் அளிக்கும் செயலே கும்பகம் ஆகும்.
பிராண வாயுவை பிராணனில் வெகுவாகக் கலக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.

இந்தச் செயலுக்கு நிறுத்தப்படும் கொள்ளளவு , நிறுத்தப்படும் கால அளவு  இதனைப் பொறுத்தே பிராணாயாம சித்தி அல்லது சுவாச சித்தி ஏற்படுகிறது. இடம் வலம் என மூக்குத்துளைகளில் சுவாசத்தை மாறி மாறி உள்ளும் வெளியும்  இயங்கச்  செய்வதை நாடி சுத்தி எனக் கூறுவோம். இவ்வாறே பிராண வாயு இயக்கத்தை தந்திரம் என பிராணாயாமத்தில் யோகிகள் கூறுவர்.

பிராணாயாமத்தால் மூவகைப் பலன்களைப் பெறுவது சாத்தியம் என சித்தர் நெறிகள் செப்புகின்றன.

உடல் பலன்கள் -

நீண்ட வாக்கியங்களை தொடர்ந்து நிறுத்தம் இன்றி நீண்ட நேரம் பேசுதல். அதுபோல் பாடுதல் , பளு மிகுந்த பொருட்களை மூச்சடக்கித் தூக்குதல் பல்வேறு பணிகள் மற்றும் விளையாட்டுக்கள் போன்றவற்றில் ஈடுபட உடலுக்கு அதிக பலம் தேவைப்படும்போது மூச்சினை அடக்கியும் அதிக மூச்சினை உள்ளிழுத்து வெளிவிடுதலும் முக்கிய காரணிகள் ஆகின்றன.

உள்ளப்பலன்கள்-
 சகிப்புத்தன்மை (பொறுமை) , சமாளித்தல், சுற்றுப்புற துன்பங்களை சகித்தல், உடல் வேதனை (வலி) தாங்குதல் , வாழ்க்கைப்போரட்டங்களை  தாங்கி நிற்றல். கவலை, கலக்கம், இவைகள் அனைத்திலும் பாதிப்பின்றி வெற்றியடைய மனபலம் பெற, மனமடங்க , பிராணனை அடக்குவதன் மூலம் இப்பலன்கள் கிட்டுவதாகின்றது.




ஆன்மீகப் பலன்கள்-
 நல்லியல்புகள், நற்குணங்கள் , நற்ச்செயல்கள் கூடுவது, உலகியல்  வாழ்க்கை என்பது யாதென உணர்வது. நிலைப்பு , நிலையாமை எதுவெனத் தேடுதல், இறையியல் அறிந்து இறையுடன் கூடுவது. மனிதனாக வாழும் போதே மனிதரில் தெய்வமாவது . மனிதத்திற்கும் ஏனைய உயிரிகளுக்கும் உள்ள வேறுபாடுகளைக் கண்டுபிடித்து எந்த விதத்தில் மனிதம் உயர்ந்தது எனப் புரிந்து கொள்ளுதல்.

பிராணாயாம வகைகள்

  • அந்தர்ப் பிராணாயாமம்
  • அபூர்வப் பிராணாயாமம்
  • அதிதூலப் பிராணாயாமம்
  • ஆபத்யப் பிராணாயாமம்
  • ஆயுர்ப் பிராணாயாமம்
  • ஆத்யமப் பிராணாயாமம்
  • குருப் பிராணாயாமம்
  • சம்பூதப் பிராணாயாமம்
  • சம விருத்த பிராணாயாமம்
  • சதுஸ்ரப் பிராணாயாமம்
  • சுரப் பிராணாயாமம்
  • சுகப் பிராணாயாமம்
  • சுபப் பிராணாயாமம்
  • சூட்சமப் பிராணாயாமம்
  • தாபத்யப் பிராணாயாமம்
  • பூர்வப் பிராணாயாமம்
  • யோகப் பிராணாயாமம்
  • கேசரிப் பிராணாயாமம்
  • குருப் பிராணாயாமம்
  • மகத்ப் பிராணாயாமம்
  • மத்யமப் பிராணாயாமம்
  • வாசுகிப் பிராணாயாமம்

இன்னும் இது போல பிராணாயாம வகைகளில் கும்பக வேறுபாட்டு நெறிகளும் பந்தம், முத்திரை , கலப்புடன் நீண்டு விரிந்த வித்தையாகிறது பிரணாயாமம்.

வாசக அன்பர்களுக்காக தொடர் இன்னும் விரிந்து செல்லும்.

Sunday, September 27, 2009

முக்கியப்பிராணன்



முக்கியப்பிராணன்
உட்பிராணன்

                                                                      
பிராணன் - இதயத்தின் அனைத்து பகுதிகளிலும்

அபானன் - வயிறு, புஜங்கள் , பெரீனியம்

வியானன்- உடல் முழுவதும்

உதானன் - இதயம், தொண்டை, பிளேட் ஏரியா , தலை , கண்புருவம்

சமானன்- நேவல் (வயிறு)

கூர்மன் - கண் இமைகள்

தனஞ்செயன் - எலும்புகள் ,சதை , தோல், ரத்தம் , நரம்புகள் , உரோமம் கிருகரன் -வயிற்றின் சிறிது மேல்புறம்

நாகன் - வயிற்றின் சிறிது மேல்புறம்

தேவதத்தன் - தொண்டை, மூச்சுக்குழாய் மேல்புறம்


மூலாதாரம் -பூமி

சுவாதிஷ்டானம் -நீர்

மணிபூரகம் -நெருப்பு

அனாகதம் -காற்று

விசுத்தி- ஆகாயம்


மூலாதாரம் - குறி, குதம், தொப்புள் கீழ்ப்பகுதி முழுவதும்

சுவாதிஷ்டானம் - தொப்புள், வயிற்றின் கீழ்ப்புறம், சிறுகுடல் ,பெருகுடல்

மணிபூரகம் -மேல் வயிறு முழுதும் , பித்தம் , கணையம் , இரைப்பை, சிறுநீரகம், வயிற்றின் அனைத்து உள்ளுறுப்புகள்

அனாகதம் - வயிற்றின் மேல்புறம் முதல் இதயம், மூச்சுப்பை,

விசுத்தி - மூச்சுக்குழல் , தொண்டை முழுவதும்,

ஆக்ஞை - கண் , மூக்கு இரண்டின் நடுப்புறம் , கீழ் மேல்புறம் பிடரிக்கு நேர் பின்புறம் , நடுமூக்கின் வழி புருவ மத்தி வழி . நெற்றி (நடு, மேல்)


பிராணாயாமம் (யோகம்) என்பது பாரதத்தின் கிடைத்ததற்கரிய சொத்து.
இங்கிருந்தே இக்கலை உலகம் முழுவதும் பரவியுள்ளது.


இதைக் கண்டறிந்து காலம் காலமாக இந்த பயிற்சியில் ஆழ்ந்து தான் வேறு உலகம் வேறு என்றல்ல இரண்டுமே ஒன்றே . நாமே இறைவன் என்பதை கடுந்தவம் மூலம் உலகிற்கு உணர்த்தியது மட்டுமல்லாமல் , வாழ்ந்து காட்டியும் தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டும் என்ற எல்லையற்ற பெருங்கருணையால் மனித குலத்தை மேம்படுத்தவும் மனிதத்தின் மூலம் அனைத்து உயிரிகளையும் நேசித்து அவைகளையும் உயர்த்த வழி கூறிய மஹா சித்த புருஷர்கள் வாழ்ந்த ஞான பூமி இது.


இந்த யோகக்கலை (யோக விஞ்ஞானம்)யை விண்ணவரும் மண்ணவரும் கற்றுத் தேர்ந்து இறைவனோடு இணையும் வித்தையை நமக்கு அளித்த
 மஹா புருஷர் ஞான சிம்மம்மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலியாவர்.
அவர் ஒரு அவதார புருஷராகவும் , வேத புருஷராகவும்,சித்த புருஷராகவும் விளங்குபவர்.

பார் முழுதும் இன்று பரவி வளர்ந்து நிற்கும் இந்த யோகக்கலையை அடிப்படையாக வைத்தே பற்பல அருளாளர்களும், மஹான்களும் அவரவர்களுக்கு உரிய விளக்கங்களுடன் யோகத்தைப்பரப்பி வருகிறார்கள். இதில் பலர் ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியினை முன் நிறுத்தாமல், தாமே அதைக் கண்டுபிடித்தது போலவும் தத்தம் விளக்கங்களே சிறந்தது என்றும் குழப்பியும் வருகிறார்கள். யோகம் என்றால் (யோகா) என்பது ஆசனங்கள் எனக் கூறுபவரும் உண்டு. அதனை வியாபாரத்திற்க்குரிய தொழிலாகவும் மாற்றி வருபவரின் பெயர்பலகைகள் எண்ணிலடங்காதது.


யோகாசனம் என்பது யோகமும்+ஆசனமும் இரண்டறக் கலந்தது என்பதே சத்குரு பதஞ்சலி மஹரிஷியின் உண்மை விளக்கமாகும்.

இறைவனை முன்னிறுத்தியே இக்கலை மிளிர்கின்றது.

இதைத்தவிர்த்துக் கூறுவது அனைத்தும் இக்கலைக்குப் புறம்பானவையே.


யோகம் என்றால் இணைவது, சேர்வது என்பதே. நான் என்ற தூல உணர்வுக்கு அடிப்படையான புலன்களின் அறிவால், நான் யார் என்பதை அறிவது இயலாது. நான் என்ற தூலத்தின் அடிப்படை கொண்டும் அதன் துணை கொண்டும் , தூலத்துள்ளேயே ஒடுங்கி,தூலத்தின் மூலம் பிரகாசிக்கும், ஆன்மாவை (ஒரு இறைக்கூற்றை ) இறைவனோடு இணைப்பதே யோகமாகும்.

இவ்விணைப்பிற்கு உதவிடும் வகையில் , இவ்வுடலின் உள்ளே மறைந்து கிடக்கும் உடல் ஆற்றலைப்பெருக்கி (சூட்சம , காரண) சரீரங்களைக் கண்டுகொள்ளவும் , யோக முன்னேற்றங்களை அடைந்திடவும் " பிராணாயாமம்" ஒரு பாலமாகவும் அதுவே ஒரு யோகமாகவும் விளங்குகிறது.



இதன் மூலம் பஞ்ச/தச/பிராணன்களின் கூட்டிற்கு (கலப்பிற்கு) பிரதான பிராணன் என்ற- பிராண வாயுவினை வசப்படுத்துவதன் மூலம் அல்லது அதனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் , அதன் பல்வேறு மறைதல் , பிறிதொரு வாயுவின் கலப்பு ஆகிய நிகழ்வுகளின் வழியே குண்டலினியின் பேராற்றலை அடைதற்கும் பிராணாயாமம் என்ற தொழிற்படுதலே பிரதானமாகின்றது.

மஹரிஷி பதஞ்சலி தமது யோக சூத்திரத்தின் திறவுகோலாகவும் , யோகப்பயணத்தில் எட்டு விதமான பாதைகளைக் காட்டி இந்த எட்டினையும் ஒருங்கிணைக்கும் வழி வகை வித்தைகளை
தமது 195 சூத்திரங்களில் விளக்கியுள்ளார்.

இவை யாவும் வடமொழி மூலமாக உள்ளதாலும் அணுவினுள் கடல்களைப் புகுத்தியுள்ளது போல் தமது சூத்திர ( ஒரு, இரு, மூன்று) வரியினுள் அத்தனையும் அடங்கியிருப்பதால் , இதற்கு மொழி
-மற்றும் ஆன்மீக , யோக அடிப்படை உணர்ந்த பெரியோர்கள் அழகிய விளக்கங்களை நமக்குத் தந்துள்ளனர்.

அவர்களுள் கடலங்குடிப் பெரியவர் பிரம்மஸ்ரீ நடேச சாஸ்திரிகள் சுவாமி வீரத்துறவி விவேகானந்தர் , சுவாமி என்ற என். ஆர். சம்பத் அவர்கள் , சுவாமி ஸ்ரீ சிவானந்தா, சுவாமி ஸ்ரீ சச்சிதானந்தா, மகான் ஓஷோ மற்றும் எத்தனையோ அருட் செல்வர்கள் ஸ்ரீ பதஞ்சலி யோகசூத்திரங்களுக்கு உரைசெய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இந்த அடியேனது பணிவான வணக்கங்களை
-என்றென்றும் வைக்கிறேன்.



                                                யோக சூத்திரங்கள்

சமாதி பாதம் 51 சூத்திரங்கள்


சாதனா பாதம் 55 சூத்திரங்கள்


விபூதி பாதம் 55 சூத்திரங்கள்


கைவல்ய பாதம் 34 சூத்திரங்கள்


மொத்தம் 195 சூத்திரங்கள்


யோகம் பிராணயாமம்

ஆன்மீக முன்னேற்றங்களை அடைய முக்கியத்துவம் அளிப்பது மட்டுமில்லாமல் உடலைப்(physical body and mental health) பேணுவதற்கும் , மனதை மனநோய் மற்றும் அமைதியின்மை , மன அழுத்தம் ) இவற்றினின்று காத்து மன ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் அத்தியாவசியமான கலை யோகம், பிராணாயாமம் ஆகும்.

மேலும் குறிப்பாக நவீன மருந்துகளால் கூட தீர்க்க முடியாத ஆஸ்த்துமா , இதய நோய், நீரிழிவு நோய் , புற்று நோய்,ஆகிய ஆட்கொல்லி நோய்களை (முறையாகசெய்யும் பிராணாயாமம், யோகம் ) மூலம் நிச்சயமாகத் தீர்க்க முடியும் என நிரூபணமாகியுள்ளது.

பிராணக்காற்று (பிராண வாயு)பஞ்ச பூதங்களில்
 ( நிலம், நீர்,காற்று (வாயு) , நெருப்பு ,ஆகாயம் )மிக முக்கிய பங்காற்றுகிறது மட்டுமின்றி பிராண வாயு பயிற்சியினால் ஏனைய
(பஞ்சபூதக் குறைபாடுகளை)க் கட்டுப்படுத்தவும் முழுதும் சரி செய்யவும் இயலுமென்பது சித்தர்கள் வாக்கு.

முந்தைய , தற்போதைய இந்திய தத்துவ ஞானிகள் கண்டுபிடித்த , ஒத்துக் கொண்ட பயிற்சியின் மூலம் பலன் அடைந்த படி, கீழ்க்கண்டவாறு விளக்கியுள்ளனர்.


ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி அவர்களின் சரகம் என்ற ஆயுர்வேத சாஸ்திரத்தில் மனித உடல் பஞ்ச பூத பொருட்கலப்பினால் அதனதன் விகிதங்கள் சரியாக இருக்கும் வரை நோய்கள் மற்றும் வயோதிகம் (மூப்பு) அவனைத் தீண்டுவதில்லை என உறுதி படக்கூறியுள்ளார் .

அச்சரிவிகிதக் கலவையினை அடிப்படையாகக் கொண்டு
மனித வளர்ச்சி மற்றும் உடல் திசுக்கள் பராமரிப்பு (Metabolic systerm) முதலியவைகளை மூன்று காரணிகளால் வாதம்-பித்தம்-சிலேத்துமம் என்ற அவைகள் தத்தம் முக்கிய இடத்தில் இருந்து கொண்டே செயலாற்றுகின்றன. இம்மூன்று காரணீயத் தனிமங்களின் விகிதங்கள் சமன்பாடு மாறுபடுகையில் மனித உடல் பெரும் பாதிப்பை அடைகின்றன. இதை திரிதோஷம் என்பார்கள் . இந்த தோஷத்தை அன்னமய கோசம் மூலம் கட்டுப்படுத்துதல் நிகழ்கின்றன.

எனினும் அம்மூன்றும் தன் ஆதிக்க இடங்களிலிருந்து மற்றோர் இடங்களுக்குச் செல்ல பயணிக்க இயலாது. உடலில் தேவையான இடங்களுக்கு தேவையான போது ,தேவையான விகிதங்களில் சென்று பங்களிக்க முடியாமல் போவதே இதன் குறைபாடுகளாகும்.


“நீருண்ட கார்மேகம் தானே பரவி மழை பெய்விக்க இயலாததும் , அதைக் காற்றின் துணை கொண்டு தக்க விடத்தில் பொழியச் செய்வது போல் “இத்திரிதோஷக் (குறைபாடு) குவியலை இடம் மாற்றி நன்மை பயக்கச்செய்ய, உடல் முழுதும் எடுத்துச்செல்ல பிராண வாயு என்றாகிய உயிர்க்காற்றால் பிராணாயாமத்தால் நேர் செய்ய இயலும் என்பதும் ரிஷிகளின் வாக்கு.


பிராணாயாமத்தால் (மன நலன்கள் பாதிப்பு) களுக்கு காரணமான
“ரஜோ” , “ தமோ” குணங்களையும் முழுதும் நீக்கி “சத்துவ” குணத்தை பிரித்தெடுத்து விளங்கச் செய்ய முடியும் என்பதே யோகத்தின் பிராணாயாமப்
-பொதுவாகும்.

பிராணாயாமத் துவக்க ப்பயிற்சியினை , மூச்சுப்பயிற்சியினை ரேசகம் (வெளிமூச்சு), பூரகம் (உள்மூச்சு ) முதலில் சரியாகச் செய்வதே ஆகும்.


1) நுரையீரலின் காற்றுப்பைகள் அதன் கொள்ளளவு முழுவதும் நிரப்புதல் என்ற செயலை ஒரே சீராக , பரபரப்பின்றி ஒரு கால அளவை நிர்ணயித்துக் கொண்டு (பயிற்சி தருபவரின் சொற்படி) நிகழ்த்துவது பூரகமாகும்.

2) உள்நிரப்பிய காற்றை ஒரே சீராக குறிப்பிட்ட கால அளவில் வெளிவிடுதல் ரேசகமாகும்.

3) ரேசகம், பூரகம் இரண்டையும் வலது இடது மூக்குத்துளைகளில் ஏற்றி இறக்குவது என்பதில், உள்ளிழுத்தலை இடது நாசி மூலமாகவும் , வெளிவிடுதலை வலது நாசி மூலமாகவும் மேற்சொன்னபடி சிறிது காலம் 15 அல்லது 30 நாட்கள் வரை இவ்விதம் பயிற்சி செய்தால் அடிமூக்கின் பின்புறம் நெற்றிப் பொட்டிற்கு உள்ளே ( புருவ மத்திக்கு நேர் கீழ் உள் பகுதியில் ) உள்ள இடங்கலை , பிங்கலை என்ற உணர்வுத் (தட்டுக்கள் /நாடித்தளம்) உணர்வு பெற்று தன் செயலைப் பதிவு செய்யும்.

இதன் பயனாக , உடலில் பிராண ஆதிக்க வாயில் திறப்பதோடு , முக்குணங்களில் ஒன்றான ரஜோ குணவியல்பு படிப்படியாகக் குறையத் துவங்கும். இந்த பயிற்ச்சிக்குப்பின், (ரேசக-பூரத்திற்க்குப்பின்) கும்பகம் என்ற மூச்சு உள் நிறுத்தம் என்ற பயிற்சி தொடருகின்றது .

கும்பகம் என்றால் அடைத்தல், நிரப்புதல் அசைவற்று இருக்கச்செய்தல் எனப் பொருள்படும்.

உள்ளிழுத்த மூச்சை வெளி விடாதபடி குறிப்பிட்ட கால அளவு நிறுத்தி வைத்தல் ஆகும்.

இக்கும்பகம் என்ற நிகழ்வு மூன்று வகைகளைக் கொண்டதாகும்.

அகக்கும்பகம்

புறக்கும்பகம்

தம்பனம்

என்பதாகும். வரிசைக்கிரமத்தில் கூறுகையில் நினைவகம்,முனைவகம்,பூரகம்  கும்பகம், ரேசகம்,என்ற நிலைகளாகப் பின்னப்பட்டதே பிராணாயாமம் ஆகும்.

கும்பகம் செய்கையில் குருவின் வழி காட்டுதல் அவசியம்.



ஒவ்வொரு நிகழ்வும் அமர்க்கை, திசை, காலம், தேசம், படர்க்கை என ஐந்து முகங்கள் கொண்டிருப்பதால் பொதுவான பிராணாயாம நியதிகள் எல்லோருக்கும் பொருந்தத் தக்கதல்ல என்பதே குரு உபதேசமாகும்.

மூச்சுப் பயிற்சியின் நல் விளைவுகளே பிராணாயாமத்தின் உயரிய பலன்கள் ஆகும்.

எனினும் பொதுவான விஷயங்கள் கூட புரியாதிருப்போர்க்கேன்ற இப்பிராணாயாமத்தொடர் விரிவாக்கப்பட வேண்டும் என்பதே ஸ்வார்த்தம் சத் சங்கத்தின் அமைப்பான மகரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரத்திற்கு மறைமுகமாய் சத்குரு இட்ட கட்டளை என்பதாகக்கருதி இவைகள் வெளியிடப்படுகின்றன.

-மேலும் தொடரும்

Thursday, September 10, 2009

கேட்டு மகிழுங்கள்

சில வருடங்களுக்கு முன்னர் சத்குரு பதஞ்சலி மகரிஷி அவர்கள் பற்றிய பக்தி பாடல்களை ஆடியோ பதிவு செய்து வெளியிட்டிருந்தோம்.

சிறு முன்னுரைக்காக பிரபல விளம்பர மற்றும் செய்தி வாசிப்பாளர்
திருமதி நிர்மலா பெரியசாமி அவர்களை அழைத்திருந்தோம்.

அவரின் முன்னுரையுடன் பத்து பாடல்களை கொண்ட ஆடியோ தொகுப்பை வெளியிட கேந்திரத்தால் திட்டமிடப்பட்டிருந்தது.

பதஞ்சலி மகரிஷி வரலாறு பற்றி அறிந்த உடன் மெய்சிலிர்த்த
திருமதி நிர்மலா பெரியசாமி கேந்திரத்தின் இந்த முயற்சியினை பாராட்டியதுடன் மட்டுமில்லாமல் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து அவர் தந்த முன்னுரைக்கு நாங்கள் அளித்த சன்மானத்தையும் மறுத்து மிகுந்த திருப்தியுடன் சென்றார்.


அவரை மெய்சிலிர்க்க வைத்த சத்குருவின் சிறிய வரலாற்றினை பதிவுலக நண்பர்களாகிய நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

ஆடியோ பதிவை இங்கே பதிவிட்டுள்ளோம் . உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம்.

பிராணாயாமம் பற்றிய அடுத்த பதிவு விரைவில் வெளி வரும்.

Saturday, September 5, 2009

பிராணாயாமம்




தச வாயுக்களும் அதன் பணிகளும்

உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது.கண்ணால் காண முடியாத (உயிர், பிராணன், ஜீவன்) எனும் உயிர்க்காற்று நிலவி, நிரவிடும் ( தச வாயுக்களில் ஒன்றான பிராதனமான பிராண வாயு ஆகும்.) ஒவ்வொரு உயிரும் தன் தாயில் கர்ப்பத்தில் உதித்து சிசு வளர்கையில் தன் தாயிடம் இருந்து அதன் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் அடங்கிய ஒரு கலவையை தொப்புழ் கொடியின் மூலம் பெறுகின்றது.

ஆணோ அல்லது பெண்ணோ அதற்கு ஏற்ற அவயவங்களில் ஆக்கத்தினையும் முழுமையாக உருவாக்கும்.

செல்களையும் அத்தொப்புழ் கொடியினின்றே அனுப்பப்பட்டு அதன் விளைவாகவே அங்க வளர்ச்சி துவங்கி விட்டது என்றே கூறலாம்.

(ஸ்டெர்ம்செல்ஸ் பேங்க் ) இன்று மனித அங்கங்கள் எவை ஆயினும் அது பழுது பட்டிருந்தாலோ அல்லது நீங்கப்பட்டிருப்பினும் கூட அவற்றை ஸ்டெர்ம்செல்கள் மூலம் முழுமையாக உருவாக்க முடியும் என்று உணர்ந்திருக்கிறார்கள். இதன் அடிப்படை யாதெனின் பிராணனின் சித்து விளையாட்டே அது.

தாயின் பிராண வாயுத்தொகுப்பு முழுவதும் சிசுவின் முழு அங்கங்களின் (தலை உட்பட) உற்பத்திக்கே செலவிடப்படுகின்றன.

சிசு வளர்ச்சி என்பதற்கு கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் வெளிப்பிராணன் கருவிடம் தன்னைப் பிணைத்துக் கொள்கிறது. பின் முற்றிய 42 வாரங்கள் முடிந்ததும் குழந்தை அன்னையை விட்டு வெளி உலகிற்கு வந்த பின் ஏற்கனவே பிணையுண்டிருந்த பிராணன் குழந்தையின் வளர்ச்சிக்கும், அதன் அனைத்து வாழ்க்கை இயக்கங்களையும் (Metabolic System) வளர்சிதை மாற்றப்பணிகளை பொறுப்பேற்கிறது.

பிறந்த உடன் துவக்கிய சுவாசம் இறுதி மூச்சு எனப்படும் மரணம் வரை அவனை வாழ வைக்கிறது.



பிராண வாயுக்களோடு (பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன்) என்று பெயர்ப்பும் பிரதான ஐந்து வாயுக்களுடன் இதர உப வாயுக்களான
(நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன் , தனஞ்செயன் ) என்ற ஐந்து வாயுக்களும் சேர்ந்து தச வாயுக்கள் எனப்படும் பத்து வாயுக்களும் இணைந்திருப்பினும் செயல்படாமல் இருந்தன எனக்கூறலாம். கருவீட்டினின்றும் பெருவீடு என்ற இந்த பிரபஞ்சத்தின் பிடிக்கு வந்த பிறகே இந்த பத்து வாயுக்களும் தத்தம் பணியினைத் துவங்கியது என்பதோடு உடலின் பல்வேறு பகுதிகளில் பிராணனோடு இணைந்தும், தனித்தும் பிராணனின் கட்டுப்பாட்டில் பங்கேற்கிறது.


தச வாயுக்களும் அதன் தன்மைகளும்


பிராணன்

ஏனைய வாயுக்களுக்கு எல்லாம் தலைமையாக இருந்து அனைத்து உறுப்புகளுக்கும் உயிரூட்டும் வகையில் ரத்த ஓட்டத்தின் மூலம் பிராண வாயுவினை அளித்து வருகிறது. இப்பணிக்கு வாசி என்ற சுவாசத்தை பயன்படுத்தி அச்சுவாசத்தின் மூலம் அச்சுவாசத்தினுள் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்கிறது. இது மேல் நோக்கிய பாய்ச்சலைக்(ஓட்டம்)கொண்டது.

அபானன்

அபான வாயு கீழ் நோக்கிய பாய்ச்சலைக்(ஓட்டம்)கொண்டது. “மலக்காற்று” எனவும் இதற்குப் பெயர் உண்டு. குண்டலினி போன்ற மா சக்திகளைப் பெறுவதற்கு இன்றியமையாதது மட்டுமின்றி குறிப்பிட்ட சில பயன்களுக்காக அபானன் வெளியேறி விடாமல் இருக்கச் சில பந்தங்களை இயற்றி அப்பலன்களை அடைவாரும் உண்டு. கும்பகம் என்ற உள்நிறுத்த சுவாசப்பயிற்சியின் பலன்கள் எண்ணிலடங்காதது என சித்தர்கள் கூறுகின்றனர். அவ்வமயம் அபானனை வெளியேறி விடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இதில் தவறு ஏற்படுமாயின் கும்பகப்பயிற்சி பலன் அற்றதாகி விடும் என்றும் எச்சரிக்கின்றனர்.


வியானன்

இதன் உற்பத்தி மூலத்தானமாக மண்ணீரல் விளக்குகிறது. உணர்வு நரம்புகள் (கட்டளை நரம்புகள்) மற்றும் உணர்வுகளை எற்றிசெல்லுதல் ,செயல் படுத்துதல் நரம்புகளாகவும் மற்றும் இரு நரம்புகளுக்கு இடையே வியாபகம் பெற்ற நரம்பணுக்களை கட்டுப்படுத்துவதாகவும் நரம்புகளின் கேந்திரமான மூளையையும் செயல்படுத்தும் (இயங்கும்) வகையில் தொழில் புரிய வைப்பதும் வியானன் என்ற வாயு ஆகும் . இதனை தொழிற்காற்றென அழைப்பர்.


உதானன்

மூச்சு மண்டலத்தின் மேல் பகுதியில் உள்ள முன் தொண்டை, மூக்கு ,குரல் வளை, மூச்சுக்குழல் , மூச்சின் இதர கிளை குழல்கள் ஆகிய கருவிகளின் உதவியினாலும் நாபி எனும் பகுதியில் இருந்து பிராண உந்துதலால் குரல் (சப்தம்) எழும்புவதற்கு அடிப்படை உதானன் என்ற ஒலிக்காற்று ஆகும். மேலும் குரல் வளையினுள் உட்பக்கத்திற்குள் இரண்டு பக்கத்திலும் பக்கத்திற்கு இரண்டு திசுக்களான மடிப்புகள் இடைவெளியுடன் அமையப்பெற்றுள்ளன . இம்மடிப்புகள் குரல் நாண்கள் எனப்படுவதாகும். இதனுள்ளே உதானன் செல்கிறபோது குரல் நாண்கள் அதிர்ந்து ஒலியினை எழுப்புகின்றன. சமானன். உடலின் அனைத்துப் பகுதிகளில் உள்ள திசுக்கள் மற்றும் மிக நுண்ணிய உடலணுக்களை வளர்க்கவும் பராமரிக்கவும் காரணியாய் உள்ளதும் பல்வேறு வகை புரதம் மற்றும் இதர தாதுக்களை உணவில் இருந்து பிரித்தல் , உணவை செரித்தல் , அவ்விதம் செரித்தல் மூலம் கிட்டிய சத்துக்களை உடல் முழுதும் பரவச்செய்தல் போன்ற பணிகளைச் செய்யும் வாயுவே சமானன் ஆகும் .

இதனை நிரவுக்காற்று(பரப்புதல்,சேர்ப்பித்தல்)எனப் பெயர்பெறுகிறது.

நாகன்

பிராணனின் தலைமை வாயிலான மூக்கு மற்றும் கேந்திர பாகமான நுரையீரலின் அனைத்துப் பகுதிகளிலும் நோய்த் தொற்று ஏற்படுத்தும் கிருமிகள் தூசு, மாசுக்காற்று , ஆகியவைகள் உட்புகாமல் வெளியேற்றும் வகையில் மூளையின் அதிவேக கட்டளையின்படி சாதரண மூச்சின் அழுத்தம் மற்றும் வேகத்தை விட பல நூறு மடங்கு வேகமும் அழுத்தமும் கொண்ட தும்மல் என்ற நிகழ்வினை ஏற்படுத்தும் வாயு நாகன் ஆகும்.
இதனை “தும்மற்காற்று” எனக்கூறுவர். மேலும் கபாலத்தின் கீழ்ப்பகுதி ,கண்களின் நேர்பின் பகுதி , மூக்கின் வலது மற்றும் இடது உள்பள்ளப்பகுதி (CAVITY) ஆகியவற்றின் சவ்வுகளின் ஒவ்வாமை (அலர்ஜி) காரணமாக இறந்த செல்களை வெளியேற்றவும் , தும்மல் மூலம் வெளியேற்றுதலுக்கு நாகன் வாயு உதவிபுரிகிறது.

கூர்மன்

உள்விழி நீரை சரியான அழுத்தத்தில் வைத்திடவும் விழிகளின் அசைவிற்கு துணை புரிவதும் , மகிழ்ச்சி ,சோகம் மற்றும் விழிக்கு ஒவ்வாத நிலையினை ஏற்படுத்தும் காலங்களில் விழி நீர் என்ற கண்ணீரை வரவழைப்பதும் கூர்மன் என்ற வாயுவின் பணியாகும். குறிப்பு - விழிநீரில் சோடியம் குளோரைடு என்ற உப்பு நீர், அல்குமீன் , என்ற முட்டைச் சத்து சிறிதளவு சளி போன்ற கிருமி நாசினிகளை வெளியேற்றி விழிகளை பாதுகாப்பதும் கூர்மனின் பணியாகும்.


கிருகரன்

மூளை தனக்கு ஒய்வு பெற எண்ணும்போதும் மூச்சின் வேகம், மூச்சின் எண்ணிக்கை இரண்டையும் குறைக்க முயலும்போது அந்நேரம் உறக்கம் வருவதற்கு “கொட்டாவி” என்ற செயலை ஏற்படுத்துவது கிருகரன் ஆகும். அவ்வேளை நுரையீரல் உள்ளே உட்புகும் வெளியேறும் பிராண வாயு குறைவினால் உடலின் அனைத்து பாகங்களிலும் பிராண வாயு ஏற்றம்
திடீரெனக் குறைவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் நுரையீரலை வேகமாகச் சுருங்கி விரியும் தன்மையினை ஏற்படுத்தி நுரையீரல் பிராண வாயு பற்றாக்குறையினைச் சரிப்படுத்தும் நோக்கமும், ஆக இவ்விரு பணிகளையும் செய்து முடிப்பதும் கிருகரன் என்ற வாயுவின் பணி ஆகும்.


தேவதத்தன்

விழி உலராயிருக்கவும் , விழியை பாதுகாக்கவும் ,இமைகளை இமைத்தல் (நிமி) என்ற பணியை மேற்கொள்வது தேவதத்தன் ஆகும். மேலும் நாம் உறங்கும் சமயம் தவிர்த்து விழித்திருக்கும் முழுதும் இடைவிடாது செயாலற்றும் வாயுவை தேவதத்தன் என்பர்.

தனஞ்செயன்

மனித உடல் இறந்து பட்டு வீழ்ந்தபின் ஏனைய ஒன்பது வாயுக்களின் பணிகள் முற்றிலும் நின்று விடும். அத்துடன் அவை யாவும் உடலை விட்டு வெளியேறிவிடும். ஆனால் தனஞ்செயன் மரித்த உடலில் இயங்கிக்கொண்டு இருந்த ஒவ்வொரு செல் (நுண் திசுக்கள்) இயக்கமறச்செய்து விடுகிறது. அவ்வமயம் தனஞ்செயன் நுண் கிருமிகளைத் தூண்டிவிட்டு வெளியே இருந்து வெளிக்காற்று, ஒளி உட்புக முடியாமல் உடல்தோல் மற்றும் தசைகளை விறைக்கச் செய்வதும் உடலை வீங்க வைத்தும் பின் உடலில் இருந்து வெளியேறிவிடுகிறது. இதனை வீங்கற்காற்று என அழைப்பர். இவ்விதமாய் தசவாயுக்களும் நம் உடலில் பல்வேறு செயல்களும் தன்னிச்சையாக செயல்படுகிறது. உயிர்க்காற்று (பிராண வாயு) யின்றி ஏனைய ஒன்பது காற்றுகளும் செயல்படமுடியாது. எனவே பிராணனை நன்கு இயக்கி பிராணனுள் பிராணனால் சக்தியூட்டி பிராண ஆற்றலை மேம்படுத்தி அதன் வழியே உடல், மனம் இரண்டின் இயக்கங்களை நம் கட்டுபாட்டில் கொணர்ந்து உடற்சக்தி , உளசக்தி இரண்டின் துணையுடன் மூன்றாவது ஆன்ம சக்தியை எழுப்பி அதன் மூலம் தேவையான போது உடல் இயக்கத்தை முற்றிலும் நிறுத்தி ஆன்ம எழுச்சி முதிர்கின்ற போது இவ்வுடற் சக்தியின்றியே இறைசக்தியினை உணர்வதற்கு ஞானிகள் கூறிய யுக்தியே பிராணனை வசமாக்கும் “பிராணாயாமம் ” ஆகும்.

Monday, August 24, 2009

பிரணவ மந்திரம்


(ஓம் எனும் ஓங்காரம்)

ஓம் எனும் ஓங்காரத்தின் சிறப்பினைச் சொல்ல ஒரு பதிவு போதாது.

ஆயிரக்கணக்கான பதிவுகள் வெளியிட்டாலும் ஓங்காரத்தின் பெருமை அளவிட முடியாதது.

இருந்தாலும் இந்த கலியுகத்தில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அது மனிதர்களால் எற்றுகொள்ளதக்கதாக இருக்கிறது.

அவ்வாறே மேலை நாட்டு அறிவியல் ஆராய்ச்சி நிபுணர்கள் ஓங்காரத்தையும் சோதனைக்கு எடுத்துக் கொண்டனர்.

அதன் விளைவு மற்றும் முடிவுகள் இவ்வாறு வந்தன.

டாக்டர் ஹெர்பெர்ட் பென்சன் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் வெளிவந்தவை.


பாஸ்பனில் நடந்த மருத்துவர் மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை.

ஓம் என்ற ஒலியினை (பிரணவ மந்திரத்தை) மன ஒருமையுடன்
திரும்பத் திரும்ப கூறும்போது மன அலைகளின் வேக மாற்றத்தில் ஏற்படும் பலன் (விளைவு) விலை உயர்ந்த மாத்திரைகள் ஏற்படுத்தும் பலனை விட அதிகமாக கொடுக்கிறது.

எய்ட்ஸ் நோயினைப் பரவ விடாமல் தடுக்கிறது.

குழந்தையில்லாதவர்களுக்கு மலட்டுத் தன்மையினை நீக்கி (கருப்பதியம்) உண்டாக்க உதவி செய்கிறது.

RELAXATION RESPONSE எனப் பெயரிட்டு கூறுவது.

மந்திரங்கள் மற்றும் பிரார்த்தனைகளால் ஏற்படும் மாறுதல்கள்

மூச்சின் வேகம் குறைகிறது.

மன அலை அதிர்வை குறைக்கிறது.

மன ஓய்வு வருவதால் அறுவை சிகிச்சை அவசியத்தையும் படிப்படியாக குறைந்து மருந்து எடுத்துக் கொள்வதைக் குறைக்கிறது.. 36 சதவிகிதத்தினர் மருத்துவ மனைக்குச் செல்வது தவிர்க்கப் படுகிறது.


( ஆதாரம் -ஹிந்து நாளிதழ், 7/12/1995)


ஓங்காரம் ஒலிக்கட்டும் . சுயம் (ஆன்மா) வெளித்தோன்றட்டும்.

வாழ்க சத்குரு. வாழ்க இறைவன்

Thursday, August 20, 2009

சித்தர்களின் உத்தி

காரணம்- காரியம்



காரியா வித்தை என்பது உடம்பை எடுத்த ஆன்மாவின் நிலையாகும்.

காரிய கேவலம்:
மனமானது ஐம்புல நுகர்ச்சியினை நீக்கி இளைப்பாறும் நிலை.

காரிய சகலம் :
- ஐம்புல நுகர்ச்சியினை மனம் துய்க்கும் நிலை

காரிய சுத்தம் அல்லது காரிய சித்தி:
உடம்பை எடுத்த ஆன்மா ஒடுக்கமும் , தொழிலும் இன்றி இறைவன் திருவடியினை நினைத்துச் செல்லும் நிலை.

உடம்பு = பருப்பொருள்
உள்ளம்=நுண்பொருள்
உயிர் = அதி நுண்பொருள்

சித்தர்களின் உத்திகள் ஆறு

1) உயிரின் - உடலின் தன்மைகளையும் இயல்புகளையும் அனுபவ மொழிகளின் மூலம் உருவாக உத்தி மூலமும் எடுத்து சொல்வது.
2) வரைமுறைகளைச் சொல்லி கதைகளைச் சொல்லி அதன் உருவக தத்துவங்களைப் பூட்டை திறப்பது போல் திறந்து காட்டுவது.

பரம்பொருளின் பேராற்றல், அதனோடு அண்டமும் ,பிண்டமும் எப்படி இணைந்திருக்கின்றன என்றும், இயற்கை இயல்புகளை இறையுணர்வு கலந்து விளக்கும் உத்தி.


3) மனம், உயிர் - பற்றி விளக்கி மனிதம் - விலங்கு வேறுபாடுகள் கூறி, உள்ளத்துக்குள்ளே நிகழ்த்த வேண்டிய தவ ஒழுக்கங்களை பற்பல யோக விளக்கங்கள் மூலம் கூறும் உத்தி.


நான்காவது உத்தி:

மந்திரங்களைப் பற்றியது. மந்திரங்களுக்குரிய சொற்களும், ஒலிகளும் , பற்றி எத்தனையோ நூறாண்டுகளில் பயின்றுபயின்று சித்தர்கள் கண்டுபிடித்த ரகசியங்களாகும் .மந்திரங்களை எப்படி யந்திரங்களில் அடைப்பது என்ற உத்தி ஒலி மாறுபாடுகளால் மனித மனத்திற்கு எப்படி நன்மை , தீமைகள் மற்றும் சொற்கள் மூலம் ஒலிகளை இயக்கி தியான முறைகளைக் கூறி மனித மனத்தை உயர்த்தி மன ஆற்றல்களை உயிர்பிப்பது.

ஐந்தாவது உத்தி
சரியை ----------------- தொண்டு நெறி, தாச மார்க்கம்.

கிரியை----------------- மகன் தந்தையினை வழிபடுவது சத்புத்திர மார்க்கம்.

யோகம் ----------------சக மார்க்கம் தோழமை (யோகம்) ----- இறைவனை நண்பனாக கருதுதல்

ஞானம் - இம்மூன்றையும் கடந்த பேரின்பச் செவ்வழி .

ஆறாவது உத்தி.

ஆன்ம நிலை சித்தர்களின் ரகசியம் (பெரிய ரகஸ்யம்) அன்மாக்களுடைய பரிபக்குவ நிலைக்கு ஏற்ப (ஜீவாத்மா) இறைவனே ஆசிரியனாக வந்து அவரவர்களுக்கு ஏற்ப அருள் செய்கிறான்.

சித்தர் பாடல்

பேத கன்மத்தால் வந்த , பிராரத்தம் நானவாகும்,
ஆதலால் விவகாரங்கள், அவரவர்க்கான ஆகும்
மாதவம் செய்யினும் செய்வர், வாணிபம் செயினும் செய்வர்,
பூதலம் புரப்பர் ஐயம், புகுந்துண்பார் சீவன் முக்தர்,

சீவன் முத்தர் சீவன் முத்தரே

அவரவர்க்கு விதிக்கப்பட்ட தொழில்களைச் செய்வர்.

“மூன்று “வினைப்பயன்கள் ஞானிகளுக்கே எவ்வாறு தீருகின்றன.?

சஞ்சிதம் = முற்பிறவிகள் பலவற்றில் செய்த வினைகளில் இன்னும் பயனளிக்காமல் எஞ்சி நிற்கின்ற கருமச்சுமை

பிராரத்தம்= இந்த பிறவிக்கு என்று பங்கீடு செய்யப்ப்பட்ட வினை


ஆகாமியம்= இந்தப் பிறவியில் செய்து அடுத்த பிறவிக்கு என்று சேர்கின்ற நிலை.

சித்தர்களின் ஞானத்தீ (கனலால்) சஞ்சிதம் முழுவதும் எரிந்து சஞ்சிதம் சாம்பலாகி விடுகிறது.



ஆகாமியம்-
வினைகள் ஞானியை ஒட்டுவதில்லை. அவனைத் தொடுவதே இல்லை. ஏனெனில் அவன் தாமரை இலையில் தண்ணீர் போல எதிலும் தோயாமல் இருக்கின்றான்.

பிராரத்தம் = வினை மூன்று வகையால் நசிக்கின்றது. என ஞானிகள் கூறுகின்றனர்.

1) மூடர்களின் வாயிலாக (ஞானிகளை சந்திக்கும்போது )ஒரு பங்கு அவர்களிடம் போகிறது.

2) அறிவாளிகள் ஞானியை வணங்கும்போது ஒரு பங்கு அவர்களுடைய அறம் ஞானியைச்சாருகின்றது.

3) உடலில் அனுபவிக்கும்போது ஒரு பங்கு தீருகின்றது.


இவ்விதம் வினைப்பயன் மட்டுமே தீருமேயன்றி ஜீவாத்மாவை பீடித்துள்ள ஆணவமும் ,கன்மமும் , மாயையும் - சற்குருவின் ஸ்பரிசம் பட்டபோதே தீரும் .

பரிசன வேதி பரிசித்ததெல்லாம்
வரிசை பொன் வகையாகு மாப் போல்
குரு பரிசித்த குவலயமெல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதியாமே !
- “திருமூலர் பெருமான்”

Sunday, August 16, 2009

முக்குண இயல்புகள்

சத்துவ குணவியல்பு





தேவ குணம்:

அன்பு, அமைதி, அறநெறி, நன்மைகளையே நோக்கும் தன்மை, நெறி பிறழாமை , தனக்கென வாழாமை , உயரிய நோக்கம், உள்ளத்தூய்மை, நல்லோர் சேர்க்கை, பொது நிலையாமை தத்துவம் பற்றி உணர்ந்து உலகபந்தங்களில் ஒட்டாது விலகியே நிற்றல், பற்று, பயம், கவலை, எதிர்பார்த்தல் எதுவும் அற்ற நிலை, போன்ற உயர் குணங்கள் .


தமோ குணவியல்பு


மிருக குணம் :

காமம், வெகுளி, மயக்கம், இச்சை, உலக பொருட்களிலும் சுகங்களிலும் தணியாத ஆசை கொண்டவர்கள். தன்னலம் ,பெருமை,
பிறர் குற்றம் பேசல், யாவையும் தனதாக்கிக் கொள்ளும் முயற்சியில் இறங்குபவர்கள் , தர்மம், நியாயம் , நீதி, உண்மை மற்றும் நல்லறங்களை நடத்தாது . இவையனைத்திற்கும் புறம்பாக எதிராகச் செயல்படுவார்கள்.


ரஜோ குணவியல்பு :




ஆளுமைத் தன்மை, அடக்குதல், அடங்காமை, மேலாண்மை,சுகபோகம்நாடல், இரக்கமில்லா அரக்க குணம், தோல்விபயம், எளிமை விரும்பாமை, எளியோரை மதியாமை, படாடோப வாழ்க்கை , வஞ்சகம், நெஞ்சிலொன்றும் வாக்கிலொன்றுமாய் உரைப்பவர்கள், மிக உற்றவர்களிடம் கூட உண்மை உரைக்காதவர்கள். தற்புகழ்ச்சி விரும்பிகள், பிறர் தலைமை விரும்பாதவர்கள்.


முக்குணங்களும் அதன் இயல்புகளும் அதற்கேற்ற செயல்பாடுகளும் அனைத்து மனித ஜீவிகளிடம் கலந்தே காணப்படுகின்றன.




தேவர்களும் இதற்கு விலக்கானவர்கள் அல்ல .

சத்துவ , ரஜோ, தமோ, இம்மூன்றின் கலப்பின் விகிதத்தின் (விழுக்காடு) பொறுத்தே அவர்களுடைய குணாதிசயங்கள் அவர்களிடம் பதியப் பெறுகின்றன.

முக்குணங்களில் எக்குணம் மேலோங்கி இருக்கிறதோ
(விழுக்காடு அதிகப்பட்டிருக்கிறதோ ) அதுவே அவர்களின் முக்கிய செயல்பாடுகளை நிர்ணயிக்கின்றன.

தீமை அளிக்க வல்ல , பாவங்களைப் புரிய வைக்கும் ரஜோ ,தமோ குணங்களின்றும் சத்துவ குணம் மேலோங்கி சத் புருஷர்களாக நம்மை மாற்றவல்ல சக்தி வழி அல்லது முறை தான் என்ன?

யோகத்தினால் மட்டுமே அது இயலுமாயின் அதைப் பின்பற்றி மேலேறுவதற்கு சத் குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் 196 சூத்திரங்களின் கூறப்பட்டுள்ளவைகளை எளிதாக அறிந்து கொள்ளவும், அறிந்த பின் பயிற்சி மேற்கொண்டு வெற்றியடையவும் இத்தொடர் உதவுமாயின் அதுவே இந்த அடியவனின் (குருவருளால், திருவருளால்) அளித்த பெரும்பேறாகும் என்று மகிழ்வேன்.

வாழ்க அனைத்து உயிரினங்களும் , வெல்க , மீழ்க இம்மானுடம்.

ஓரளவேனும் சத்துவம் பொருந்தியவர்கள் வாழ்நாளில் என்றாவது ஒரு நாள் அவர்கள் நிச்சயமாக ஆன்மீகத்துட் புகுந்து அறவழி மேற்கொள்வார்கள்.

மேலும் அவர்கள் எவ்வளவு தரமாறியவர்களாய், தடம்மாறியவர்களாய் இருந்திருப்பினும் தன்னை மாற்றிக்கொள்ள திருந்தி விட வாய்ப்பு கிட்டும்போது அதைத் தவற விடாமல் பற்றிக்கொண்டும் , உலகபற்றுகளை விலக்கிவிடவும் நிச்சயம் வாய்ப்பு பெறுவார்கள்.

தமோ, ரஜோ, மிகுந்தவர்கள் ஊழின் காரணமாக ஆன்மீக உணர்வு அவர்களை அழைக்கவில்லை எனினும் ஏதாவது ஒன்றிரண்டு நற்பண்புகளையாவது தவறாது கடைபிடித்து வந்திருப்பார்களேயானால் எதிர்பாராது ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டு பின் எதிர்மறைத் தாவல் செய்து ஞானமடைவார்கள்.

பின் இவர்கள் ஒருபோதும் முந்தைய தீய வழிகளை நாடாமல் நல் வழியில் நின்று நிலைத்திருப்பார்கள்.


இது போன்ற மாற்றிடும் சந்தர்ப்பங்கள் மனித குலத்திற்கு மட்டுமே சாத்தியமுள்ளதாக இருக்கின்றன எனில். மனிதன் ஒவ்வொருவனும் தன்னுள்ளே இறைவனின் ஒரு சிறு கூறு பெற்றவனாக இருப்பதே ஆகும். மேலும் எந்த ஒரு மனிதனும் சிறுகச் சிறுக , மாறி மாறி என்றாவது ஒரு பிறவியில் முக்தியடையும் பேறைக் கொண்டிருப்பார்கள். என்பதே சித்தர்களின் வாக்கு.

அவர்களின் பிறவி எண்ணிக்கை கூடலாமே தவிர, ஞானம் பெறும் வரை அவர்களுக்கு வாய்ப்பு கிட்டிக்கொண்டேயிருக்க ஞானியர்கள் அவர்களை விடாது தொடர்ந்து வழிபடுத்துவதே பணியாகக் கொண்டு கருணை செய்கிறார்கள் என்பதும் அவர்கள் திருவாக்காகும்.

இயமம், நியமம், ஏற்போம், ஆசனம் செய்வோம், பிராணயாமம் கற்போம், பிரத்யாகாரம் பரிந்துனர்வோம். தாரணை , தியானம், எனும் உறு தவத்தில் ஒன்றி நிலைப்போம். சமாதி நிலை என்ற ஆன்ம உணர்வால் சூட்சமம் பெற்று சாதிப்போம்.

விதியை நாமே உற்பத்தி செய்தோம்,

விதியைப் பரவீதியில் வீசுவோம்.

இகத்தில் பரத்தைக் கண்டு , இறையினை அறிந்து இறையில் கலப்போம்.
நித்தியம் நித்தியம் நிச்சயம் நிச்சயம்


"சத்குரு பாதம் போற்றி போற்றி "